தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக தேசிய டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள சென்ற தமிழக வீரர் விஷ்வ தீனதயாளன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயாவில் தொடங்க உள்ள தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த விஷ்வ தீனதயாளன் உள்ளிட்ட 4 பேர் அசாமிற்கு சென்றிருந்தனர். அப்பொழுது அசாமில் இருந்து மேகாலயாவுக்கு காரில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் விஷ்வ தீனதயாளன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
‘எங்கள் இளம் நம்பிக்கைக்குரிய டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வ தீனதயாளனின் மரணம் பற்றி கேள்விப்பட்டு வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சி. அவர் ஒரு விளையாட்டு ஜாம்பவான். மிக விரைவில் எங்களை விட்டுப் பிரிந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் விளையாட்டு சகோதரருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’. என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தீனதயாளன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.