மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இருப்பினும் தற்போது வரை இதற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, அனைத்து கட்சிகளும் அதற்கு ஆதரவு குரல் எழுப்பின. இருப்பினும் ஆளுநர் தரப்பில் நீட் விலக்கு மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. அதன் காரணமாகவே சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இப்படியிருக்க தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முறையான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.