மத்திய அரசின் பல்வேறு அதிருப்தியான திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மற்றும் நாளை நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குதல், வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி, காப்பீடு போக்குவரத்து, தபால் துறை மற்றும் தொலைத்தொடர்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகள் பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஆட்டோ, டாக்ஸி நிறுவன ஊழியர்களும் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இருப்பினும் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சுமார் 20 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும், இந்த போராட்டத்தின் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வங்கி சேவைகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பதாக பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் அரசு அலுவலகங்கள் திறந்து இருக்கும் எனவும் அரசு ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.