பொதுவாக திரைப்பிரபலங்கள் வரி செலுத்துவதில் பல்வேறு முரண்பாடுகளைக் கூறி வரி செலுத்த மறுத்து வழக்குகளை தொடர்வது வாடிக்கையாகி வருகிறது. அதன்படி நடிகை கௌதமி முறையாக வரி செலுத்தாதனால் அவரின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து நடிகை கௌதமி தரப்பில், ஸ்ரீபெரும்புதூர் அருகே கோட்டையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை கடந்த 2014 ம் ஆண்டு 4.10 கோடிக்கு விட்டுவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம், விவசாய நிலத்தின் வருவாய் 11.17 கோடி என மதிப்பிட்டு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை தொடர்ந்து தனது 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தனக்கு பணப்பரிவர்த்தனையில் கடும் சிரமம் ஏற்படுவதால் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என கௌதமி தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூலதன ஆதாய வரியில் 25 சதவீதத்தை நடிகை கௌதமி செலுத்தும் பட்சத்தில் அவரின் முடக்கப்பட்ட 6 வங்கி கணக்குகளை விடுவிக்கலாம் என வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, நான்கு வாரங்களுக்குள் மீதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்றும், நிபந்தனையின் பேரில் மதிப்பீடு உத்தரவின் செயல்பாடுகளை நிறுத்திவைக்க வேண்டும் என கூறி, நீதிபதி விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.