அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை இன்று இரவே சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆவின் பால் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 3கோடி வரை பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் இன்று கைது செய்யப்பட்டார். ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகவே இருந்தார். இந்நிலையில் அவரை பிடிக்க போலீசார் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் இன்று கர்நாடக மாநிலத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாளை அவர் சென்னை அழைத்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்று இரவு விருதுநகர் மாவட்ட மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி இன்று இரவே அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுநாள் வரை ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.