நகரின் அனைத்து பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டியது; மழை நீர் வடிகால் துார்வாராமல் இருந்ததால், நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது.வாகனங்கள் ஆங்காங்கே ஸ்தம்பித்தன; போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அவிநாசி ரோடு பாலம், புரூக் பாண்ட் சாலை பாலம், சோமசுந்தரா பாலம், வடகோவை மேம்பாலங்களுக்கு கீழுள்ள சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியது.
பஸ்சுக்குள் தண்ணீர் தேங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பஸ்சுக்குள் இருந்த 12 பயணிகள் தண்ணீர் இறங்கி வெளியே வந்தனர். பஸ்சுக்குள் குழந்தை உள்பட 8 பேர் வெளியே வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவலின் பேரில் கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி சென்று 8 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
இதேபோல் அவினாசி மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்க பாதையில் மழைநீர் வந்து கொண்டு இருந்தது. இதை அறியாமல் 3 பேர் சொகுசு காரில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது சுரங்கபாதையில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நபர்கள் காரை நிறுத்தி விட்டு வேகவேகமாக வெளியே வந்து தப்பினார். அவினாசி மேம்பாலத்தின் கீழ் செல்லும் ரெயில்வே தண்டவாளம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.