பொதுவாக தென்னிந்திய சினிமாவில் வாரிசுகளின் வருகை தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து, ஒரு பக்க கதை மற்றும் பாவக்கதை என ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். தற்போது வெப்தொடர் ஒன்றில் நடித்து வரும் இவர் படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கி உள்ளார். படக்குழுவினர், காளிதாஸ் விடுதியில் தங்குவதற்கான பணத்தை செலுத்தாததால் அங்குள்ள விடுதி ஊழியர்கள் அதனை கேட்டுள்ளனர். அப்போது சில காரணங்களால் படக்குழுவினருக்கும் விடுதி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பணத்தை கட்டாமல் யாரும் வெளியில் செல்லக்கூடாது என நடிகர் காளிதாசையும், படக்குழுவினரையும் விடுதி ஊழியர்கள் சிறைப்பிடித்து வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பின்னர் ஏற்பட்ட சமரசப் பேச்சுவார்த்தைக்கு பிறகு பணம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.