கோவை, செப்.29-
ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நடத்திய‘வேகமான மனக் கணக்கு’ போட்டியில் கோவை நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியை சேர்ந்த விஷால் கிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது கணித திறமைகளை வெளிப்படுத்தி உள்ளான். இம்மாணவன் “முழு எண்களின் 2 இலக்க பெருக்கத்தின் வேகமான மனக் கணக்கு” என்ற பிரிவில் ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளான். அவன் 7 நிமிடம் 5 வினாடியில் 60 கணக்குகளை செய்து முடித்துள்ளான்.
இது குறித்து நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் கீதா லட்சுமண் கூறுகையில், ‘‘எங்களின் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமிக்கவர்கள்’’ மற்றும் ‘‘எல்லா குழந்தையிடமும் திறமை உள்ளது’’ என்ற சித்தாந்தத்துடன் எங்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவனிடமும் உள்ள திறமையை நாங்கள் கொண்டாடுகிறோம். எங்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை அடையாளம் கண்டு அதை அவர்கள் வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு உதவுவதோடு அவர்கள் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “முழு எண்களின் இரண்டு இலக்க பெருக்கத்தின் வேகமான மனக் கணக்கு”பிரிவில் சாதனை படைத்துள்ள எங்கள் பள்ளியின் 12-ம் மாணவன் விஷால் கிருஷ்ணன் குறித்து எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சார்பில்அவனுடைய முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும் வரவிருக்கும் சர்வதேச சாம்பியன் விருது குறித்தும் அவனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.