கொரோனா 2ம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகள் தீவிரமாக அதனுடன் போராடி வருகின்றனர். இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் மராட்டியத்தில் 3வது அலை பரவ வாய்ப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோபே அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பு நினைத்ததைவிட நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. நிபுணர்கள் கூறுவதை பார்க்கும் போது மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் 3வது கொரோனா அலை ஏற்படலாம். மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்டவற்றில் தற்சார்புடன் இருக்க மராட்டியம் முயற்சி செய்து வருகிறது. மே இறுதியில் கொரோனா பாதிப்பு குறையலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது இருக்கும் நிலைமையை பார்த்தால், ஜூலை, ஆகஸ்ட்டில் 3வது அலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி பாதிப்பு ஏற்பட்டால் அது மாநில நிர்வாகத்திற்கு உள்ள சவாலை அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.